தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விளம்பரங்களுக்கான முன் சான்றிதழ் விதிமுறைகள் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல், 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று கால அட்டவணையை அறிவித்தது. நியாயமான பிரச்சாரச் சூழலை ஏற்படுத்துவதற்காக, மாநில மற்றும் மாவட்ட நிலையிலான ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்புக் குழுவால் உள்ளடக்கங்களுக்கு முன்கூட்டியே சான்றளிப்பு இல்லாமல், எந்த அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ, தனிநபரோ தேர்தல் நாளன்றும், வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாகவும் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்யக் கூடாது. விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற தனிநபர்கள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட நிலையிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பிக்கலாம். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்ட அனைத்து பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், விளம்பரங்களுக்கான சான்றளிப்புக்கு மாநில அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பிக்கலாம். இதன்படி, 9.4.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 8.4.2026, 9.4.2026 ஆகிய தேதிகளில் விளம்பரங்கள் வெளியிட முன்கூட்டியே சான்றளிப்பு கட்டாயமாகும். 23.4.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழ்நாட்டில் 22.4.2026, 23.4.2026 ஆகிய தேதிகளில் விளம்பரங்கள் வெளியிட முன்கூட்டியே சான்றளிப்பு கட்டாயமாகும். மேற்கு வங்கத்தில் 23.4.2026 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் 22.4.2026, 23.4.2026 ஆகிய தேதிகளிலும், 29.4.2026 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் 28.4.2026, 29.4.2026 ஆகிய தேதிகளிலும் விளம்பரங்கள் வெளியிட முன்கூட்டியே சான்றளிப்பு கட்டாயமாகும். விளம்பரங்கள் வெளியிடுவதற்கான உத்தேச தேதிக்கு குறைந்தபட்சம் இரண்டு நாள் முன்னதாக ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதாக சந்தேகிக்கப்படும் நிகழ்வுகளையும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கண்டிப்புடன் கண்காணித்து பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249301®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்