தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026: தொழில்நுட்ப ஆயத்தப்பணிகள் மற்றும் பறிமுதல் நிலவரம் 1. ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தொழில்நுட்ப ஆயத்தப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, PRO Module (ECINET) குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (Returning Officers) மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், திரு. சந்தோஷ் பதாரியா மற்றும் திரு. தருண் மிஸ்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு PRO Module-ஐப் பயன்படுத்துவது குறித்த நேரடிப் பயிற்சி (Hands-on training) வழங்கப்பட்டது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு விவரங்களை எவ்வித தாமதமுமின்றி உடனுக்குடன் வழங்குவதற்காக, வாக்குப்பதிவு தரவுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கவும் பதிவேற்றவும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs) மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குத் தேவையான முழுமையானத் திறனை வழங்குவதையும், ECINET அமைப்பைச் செயல்படுத்துவதையும் மையமாகக் கொண்டு இந்தப் பயிற்சி அமைந்தது. மேலும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் ETPB-களின் (மின்னணு முறையில் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகள்) வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய செயல்முறைகள் குறித்தும் இப்பயிற்சியில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இப்பயிற்சி மட்டுமின்றி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ECINET செயலியில் உள்ள PRO Module பயன்பாட்டினை உறுதி செய்யும் விதமாக கள சோதனையானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் ஆகியோர், நேரடிச் சூழலில் 'PRO Module' எவ்விதக் குறையுமின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில், இச்செயல்முறையை நிகழ்நேரத்தில் கண்காணித்தனர். இன்றைய பயிற்சி மற்றும் களச் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'PRO Module' செயல்பாடுகள் குறித்த இறுதிக்கட்டக் களச் சோதனை, ஏப்ரல் 15, 2026 அன்று அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களால் (PROs) நடத்தப்படவுள்ளது. 2. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 13.04.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன வ.எண் வகை தொகை (கோடிகளில்) 1 ரொக்கம் 126.64 2 மதுபானம் 2.36 3 போதைப்பொருட்கள் 75.48 4 விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) 295.46 5 இதர பொருட்கள்/இலவசங்கள் 226.15 மொத்தம் 727.58 பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் ₹381 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ அல்லது அலைக்கழிப்போ இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 022