ஞான பாரதம் திட்டம் இந்தியாவின் தொன்மையான கையெழுத்துப் பிரதிகள், பாரதத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அறிவுசார் மற்றும் பண்பாட்டு மரபைத் தாங்கி நிற்கும் அரிய பொக்கிஷங்களாகும். கோயில்கள், மடங்கள், நூலகங்கள் மற்றும் குடும்பங்களின் பாரம்பரியச் சேமிப்பகங்களில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதம், வானியல், கணிதம், மருத்துவம், ஆட்சிமுறை, தத்துவம், இலக்கியம், ஆன்மிகம், கலை போன்ற எண்ணற்ற துறைகளின் அறிவை இவை பாதுகாத்து வருகின்றன. இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஆவணப்படுத்தி, மின்னணு வடிவமாக்கி, தேசிய மின்னணுக் களஞ்சியத்தில் தொகுத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் உலக ஆய்வாளர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக இந்திய அரசு 'ஞான பாரதம்' என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள கையெழுத்துப் பிரதிகள் 2026 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தேசிய கையெழுத்துப் பிரதிகள் கணக்கெடுப்பின் மூலம் நாடு முழுவதும் 1.19 கோடிக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், 3.90 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய கையெழுத்துப் பிரதிகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 1,41,652 கையெழுத்துப் பிரதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தில் மட்டும் 47,496 கையெழுத்துப் பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், தனியார் அமைப்புகளிடம் உள்ள பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்களைச் சார்ந்த கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்கும் பணிகள் இத்திட்டத்தின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அளவிலான மையங்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தல், பட்டியலிடுதல், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மாநில நிறுவனங்களுக்கும் மையங்களுக்கும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழங்காலக் கலாச்சார பொக்கிஷங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://gyanbharatam.com/ இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்